UAE: டூரிஸ்ட் விசா வைத்திருப்பவர்களின் செல்லுபடி காலத்தை ஒரு மாதத்திற்கு நீட்டித்து துபாய் ஆட்சியாளர் உத்தரவு..!!

புதிய வகை கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பல்வேறு நாடுகள் பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. இதனால் அமீரகத்திற்கு சுற்றுலா விசாக்களில் வந்தவர்களும் தாங்கள் பயணம் மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை நிவர்த்தி செய்யும் விதமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமீரகத்தில் இருக்கும் சுற்றுலாவாசிகளின் விசாக்களை, எந்த அரசாங்க கட்டணமும் இன்றி ஒரு மாதத்திற்கு நீட்டிக்க உத்தரவு அளித்துள்ளார்.

இந்த உத்தரவின் படி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தந்திருக்கும் அனைத்து சுற்றுலாவாசிகளின் டூரிஸ்ட் விசாக்களும் எவ்வித கட்டணமும் இன்றி ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவானது தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அமீரகத்தில் புத்தாண்டு விடுமுறைகளை கொண்டாடும் வாய்ப்பை வழங்குகிறது.

மேலும், வரவிருக்கும் காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்குவதற்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் போது அனைத்து சுற்றுலாவாசிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கும் அரசாங்க நிறுவனங்கள் செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Need Help? Chat with us