குவைத்: சர்வதேச விமான போக்குவரத்து தடை நீக்கம்.. எல்லைகள் திறப்பு.. அமைச்சரவை முடிவு..!!

கடந்த வாரம் புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகள் பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து குவைத் நாட்டில் விதிக்கப்பட்டிருந்த தரைவழி போக்குவரத்து தடை மற்றும் சர்வதேச நாடுகளுடனான விமான போக்குவரத்தின் மீதான தடை வரும் ஜனவரி 2 முதல் விலக்கிக்கொள்ளப்படும் என்று குவைத் நாட்டின் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகள் எதுவும் நாட்டில் இல்லை என்று குவைத் நாட்டின் சுகாதார அமைச்சகம் உறுதிசெய்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குவைத் நாட்டில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறைகளே தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும், குவைத் நாட்டிற்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த 35 நாடுகள் மீதான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் தடை செய்யப்பட்ட நாடுகளை சேர்ந்தவர்களில், குவைத் அரசால் தடை செய்யப்படாத ஒரு நாட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விட்டு வருபவர்கள் கொரோனா சோதனையின் எதிர்மறை முடிவை கொண்ட சான்றிதழை கொண்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான முன்னேற்றங்களின்படி இந்த முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சரவையில் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Need Help? Chat with us