கொரோனா பயத்தால் விமானத்தையே புக் செய்த இந்தோனேசிய தம்பதி

கொரோனா பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்துள்ளனர் இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர்.

கொரோனா பரவ ஆரம்பித்த கடந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே பல விநோதமான செயல்கள் குறித்து கேள்விப்பட்டு வருகிறோம். அவை அனைத்திலிருந்தும் இந்த செயல் சற்று விநோதமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் கொரோனா பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் ஒருவரே வாங்கியிருக்கிறார் என்று சொன்னால் நம்பமுடிகிறதா?

ஜனவரி 4ஆம் தேதி இந்தோனேசியாவின் ஜகார்டாவைச் சேர்ந்த ரிச்சர்டு முல்ஜாடி என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆளில்லா விமானத்தில், தான் மட்டும் அமர்ந்திருப்பது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், ‘’ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்தாலும், அது ஒரு தனி விமானத்தை புக் செய்வதைவிட மலிவாகத்தான் உள்ளது’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

முல்ஜாடியும், அவரது மனைவி ஷல்வின்னே சாங்கும் கொரோனா தொற்று பயத்தால் ஒரு விமானத்தின் அனைத்து டிக்கெட்டுகளையும் புக் செய்ததாக Mashable SE Asia செய்தி வெளியிட்டிருக்கிறது. லயன் ஏர் க்ரூப்பின் நிறுவனமான பாட்டிக் ஏர் குழுவும் அந்த தம்பதி ஜகார்ட்டாவிலிருந்து பாலியிலுள்ள டென்பசாருக்கு முழு விமானத்தையும் புக் செய்ததை உறுதி செய்தது.

இதுகுறித்து மற்றொரு இன்ஸ்டாகிராம் பதிவில் முல்ஜாடி குறிப்பிடுகையில், ’’எங்களைத் தவிர வேறு யாரும் விமானத்தில் இருக்கக்கூடாது என்பதை உறுதிசெய்துகொண்டேன். நாங்கள் மட்டும் இருக்கவேண்டும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

Need Help? Chat with us