இந்தியாவில் இருந்து பயணிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருப்பதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையானது ஏப்ரல் 24 ம் தேதி 23.59 மணி நேரத்திலிருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவானது 10 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும் 10 நாட்களுக்குப் பின்னர் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து டிரான்ஸிட் விமானங்கள் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிப்பவர்களுக்கும் இத்தடை பொருந்தும் என்றும், இல்லையெனில் இவ்வாறு பயணிப்பவர்கள் மற்ற நாடுகளில் 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்க மற்றும் சரக்கு விமானப் போக்குவரத்து சேவையானது வழக்கம் போல் தொடர்ந்து இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மற்றும் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் ஆகியோருக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இன்று (வியாழக்கிழமை) உலகின் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கையான 314,835 புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் பதிவு செய்துள்ள நிலையில், அமீரகம் தற்பொழுது இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.