இந்தியா, அமீரகம் உள்ளிட்ட 20 நாடுகளில் இருந்து பயணிகள் சவூதிக்குள் நுழைய தடை..!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சவூதி அரேபியாவிற்குள் நுழைய தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், அந்நாடுகளில் இருந்து வரும் டிப்ளமேடிக் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சவூதி குடிமக்கள், மருத்துவ பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மட்டும் சவூதிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (பிப்ரவரி 3) இரவு 9 மணி முதல் அமல்படுத்தப்படும் தற்காலிக தடை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ், எகிப்து, லெபனான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துள்ள படியால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபியாவின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவில் இதுவரை 367,800 க்கும் அதிகமான கொரோனா பாதிப்புகளையும் 6,300 க்கும் மேற்பட்ட இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. மேலும், தினசரி நோய்த்தொற்று பாதிப்புகள் கடந்த வருட ஜூன் மாதத்தில் 4,000 க்கு மேல் இருந்து ஜனவரி தொடக்கத்தில் 100 க்கும் கீழே குறைந்திருந்தது.

இது குறித்து சுகாதார அமைச்சர் தவ்ஃபிக் அல்-ரபியா அவர்கள் கூறுகையில், துரதிர்ஷ்டவசமாக சமீபத்திய நாட்களில் நாங்கள் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு மற்றும் தொற்றுநோய்களின் தொடர்ச்சியான உயர்வு ஆகியவற்றைப் பதிவு செய்துள்ளோம் எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட 20 நாடுகளில் இருந்து சவூதிக்குள் பயணிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து நேரடியாக சவுதி செல்ல தடை ஏற்கனவே அமலில் உள்ளது. தற்போது அமீரகத்தை இந்தப் பட்டியலில் சவுதி சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத் தடையால் ஏற்கனவே திட்டமிட்டு அமீரகத்தில் 14 நாட்கள் தங்கியிருந்து சவுதி செல்ல அமீரகம் சென்றுள்ள இந்தியப் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Need Help? Chat with us