மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!! கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த குவைத்.. வெளிநாட்டவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை..!!
குவைத் நாட்டில் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக குவைத் அரசானது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஒரு அறிக்கையில், குவைத் அமைச்சரவையானது ஜிம்கள் மற்றும் சலூன்களை மூட உத்தரவிட்டதாக அறிவித்ததுடன், பிப்ரவரி 7 முதல் ஒரு மாதத்திற்கு ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை செயல்படுவதை நிறுத்துமாறு பிற வணிக நிறுவங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறைகளானது மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற உணவு விநியோக கடைகள் ஆகியவற்றிற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குவைத் நாட்டின் துணை பிரதமரும் அமைச்சரவை விவகார அமைச்சருமான அனஸ் அல்-சலேஹ் குறிப்பிடுகையில், அனைத்து சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ், அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் மூட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, அனைத்து உணவக வரவேற்பு மண்டபங்களும் (reception halls) இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஹோம் டெலிவரி சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நேரத்தில் செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குவைத் அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்படாத அரசு ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க சிவில் சர்வீஸ் கமிஷனுக்கு அறிவுறுத்தியதாக அமைச்சரவை குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்ததைத் தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் வெளிநாட்டவர்கள் குவைத் நாட்டிற்குள் நுழைய இரண்டு வாரங்களுக்கு தடை விதிப்பதாக குவைத் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டிற்கு வருபவர்கள் அனைவரும் தங்கள் சொந்த செலவில் ஒரு வாரம் கட்டாய நிறுவன தனிமைப்படுத்தலுக்கும், அடுத்த ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்தலுக்கும் உட்பட வேண்டும் என தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.